தவெக குறித்த கேள்விக்கு கும்பிடு போட்டு கிளம்பிய செல்லூர் ராஜு..!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய செல்லூர் ராஜூ, "'விடியா ஆட்சி வீட்டுப் பிள்ளை சாட்சி' என்ற செயலி மதுரை மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே இது போன்ற ஒரு செயலியை தொடங்கி வைத்துள்ளேன். ஆனால், அது வெறும் பரிசோதனை முயற்சி தான். இப்போதுதான் முழு திரைப்படத்தை மக்களிடத்தில் காண்பிக்கப் போகிறோம்.
திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மக்களுடைய ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக தான் தேர்தல் கூட்டணி அமைப்பார்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பவ்யமாக உள்ளன. 2026-ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது.
திமுக கூட்டணி கட்சிகள், திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல உள்ளன. காங்கிரஸ் இப்போது போர் குரல் எழுப்பி உள்ளது. திருமாவளவன் போர் குரல் எழுப்பி, எழுப்பி அடங்கி விட்டார். எதனால் அடக்கினார் என்று தெரியவில்லை. கட்சிகளை பிரிப்பது திமுக தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக பிரித்து விட்டார்கள். ஒருவேளை போர்க்குரல் எழுப்பினால் விசிக கட்சியை திமுக இரண்டாக உடைத்துவிடுமோ என திருமாவளவன் பேசாமல் உள்ளதாக நினைக்கிறன்.
இந்திய அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் படி, பட்டியல் சமூக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் எதையும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. பூரண மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
தமிழ்நாட்டு மக்கள் கொதித்து போய் உள்ளனர். 2026 தேர்தலில் உண்மையான ஹீரோ எடப்பாடி பழனிசாமி தான். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கூட்டம் தானாக சேர வேண்டும். கூட்டத்தை கூட்டி நடத்தப்படும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதல்வர் யாரிடம் கேட்டார் என்று தெரியவில்லை. சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே பிரச்சினைகள் தெரிய வரும்'' என்றார்.
தொடர்ந்து தவெக குறித்தும், விஜய் குறித்தும் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, கையெடுத்து கும்பிட்ட அவர் மற்றொரு நாள் பேசலாம் எனக் கூறிவிட்டு கிளம்பி சென்றார்.