×

நிரம்பி வழியும் வைகை அணை நீரை வீணாக்காமல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும் - சீமான்

 

நிரம்பி வழியும் வைகை அணை நீரை கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி அனைத்தும் கடலில் கலந்து, பாசனத்திற்குப் பயன்படாமல் போவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வைகை நதிநீரை முறையாக சேமிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு, கொட்டக்குடியாறு, முல்லைப் பெரியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வைகை அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழிவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பினும் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மைக்குப் பயன்பட வேண்டிய நீர் முழுவதுமாக வீணாகிவிடுமோ என்று வேளாண் பெருங்குடி மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

ஆகவே,  தமிழ்நாடு அரசு அரிதிற் கிடைத்த மழைநீரினை முழுவதுமாக கடலில் சேர்த்து வீணடிக்காமல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு பயன்படும்படி முறையாக சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.