திருத்தணி பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரா? மாபெரும் போராட்டம்- சீமான்
திருத்தணி நகரின் பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையத்தின் பெயரை, கருணாநிதி பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு கைவிடாவிட்டால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, ஐயா கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு ஐயா கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய திமுக அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அறிவித்தது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையத்தின் பெயரையும், ஆடுதுறை தாத்தா காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடியின் பெயரையும் கருணாநிதி பெயரில் எதேச்சதிகாரமாக திமுக அரசு மாற்றுவதை நான் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட பிறகு திமுக அரசு பின்வாங்கியது.
கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்த்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருவது என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும். அக்கொடும்போக்கின் நீட்சியாக தற்போது, திருத்தணி நகரில் அமைத்திருந்த எல்லை காத்த மாவீரர் ம.பொ.சிவஞானம் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையத்தின் பெயரை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்ற முயல்வது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். ஐயா கருணாநிதிக்கும், திருத்தணிக்கும் என்ன தொடர்பு உள்ளது? அவரது பெயரை சூட்ட வேண்டிய அவசியமென்ன? தன்னிகரில்லா தமிழ்ப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை தம் எழுத்தாலும், சொற்பொழிவுகளாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருந்தகை. தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகு சுதந்திர அரசியல் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டென உரைத்து, தமிழ்த்தேசிய அரசியல் காக்க தமிழரசு கழகம் கண்ட தன்மானத்தமிழர், Ôதலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்Õ என்று காத்திட்ட தீரர். திருத்தணியை அரசியல் பெரும்போர் நடத்தி மீட்டு வடவெல்லை காத்த வீரர் பெருமதிப்பிற்குரிய தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள். அவருடைய ஈகத்தினை போற்றும்விதமாகவே திருத்தணி பேருந்து நிலையத்திற்கு ம.பொ.சிவஞானம் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. அத்தகைய வரலாற்று அடையாளத்தை அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது பெருந்தமிழர் ம.பொ.சி.யின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும். ஆகவே, புனரமைக்கப்பட்டு திறக்கப்படவிருக்கும் திருத்தணி நகரின் பேருந்து நிலையத்தின் பெயரை, பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையம் என்பதிலிருந்து கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.