×

இட ஒதுக்கீடு முறையை ஒழித்து, ஏழை எளிய மாணவர்களை வஞ்சிப்பது தான் தூயசக்தியா?- சீமான்

 

தமிழ்நாட்டின் உயர்கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் உயர்கல்வியை வணிகமயமாக்கும் வகையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக்கூட்டத் தொடரின் இறுதிநாளில் அவசர அவசரமாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும், ரூ.50 கோடி நிரந்தர வைப்புத்தொகை தர வேண்டுமென்ற விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. அந்த விதிகளைத் தளர்த்தி, தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நில அளவு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கராகவும், ஊரகப் பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 கோடியாக இருந்த நிரந்தர வைப்புத் தொகை ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசின்  கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழிவகுப்பதே இச்சட்டத்திருத்தத்தின் முதன்மையான நோக்கமாகும். இதேபோன்று, தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாகி இலாபமீட்டுவதற்குச் சாதகமாக, கடந்த 2008 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு கொண்டுவர முயன்ற தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட வரைவானது கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது. முந்தைய திமுக அரசால் கைவிடப்பட்ட தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டத்தை எவ்வித தயக்கமும் இன்றி, ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட வரைவு – 2026’ என்ற பெயரில் தற்போதைய தவெக அரசு வேகவேகமாக நிறைவேற்றியுள்ளது தமிழ்நாட்டு ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் கொடுஞ்செயலாகும். உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று முடிந்த இரு வாரங்களுக்குப் பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் இப்படியொரு சட்டத்திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? யாருடைய உத்தரவின் பேரில், யாருடைய இலாபத்திற்கு இப்படியொரு திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது?

தவெக அரசு கொண்டு வந்துள்ள இத்திருத்தச்சட்டத்தின்படி தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஏறத்தாழ 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளானது, தங்களை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இதுவரை, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உதவிபெறும் கல்லூரிகளுக்கு சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதோடு, ஏழை மாணவர்களுக்கான கட்டண சலுகையை வழங்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. ஆனால், அவை தனியார் பல்கலைக்கழகங்களாக மாறிவிட்டால், இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், நன்கொடை என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் விருப்பம்போல மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளும் சூழலும் உருவாகும். இதனால் தமிழ்நாட்டுக் கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவானது, இனி கலைந்து கானல் நீராகும். மேலும், 100 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளின் மருத்துவ இடங்கள், அவை மருத்துவப் பல்கலைக்கழங்களாக மாறினால் அரசு ஒதுக்கீட்டிற்கு 50 முதல் 65 விழுக்காடு இடங்களை மட்டும் கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையும் உருவாகும். அதுமட்டுமின்றி, கல்வி கட்டணம், பாடத்திட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரைத் தனியார் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணிப் பாதுகாப்பை இழக்கும் ஆபத்தும் உள்ளது. ஏற்கனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் 5000க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்கப்படாத நிலையில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சட்டப்படியான பணிப்பாதுகாப்பும், சலுகைகளும் நிர்வாகங்களால் மறுக்கப்படும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள தனியார் சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தற்போதைய விதிமுறை தளர்வுகளைப் பயன்படுத்தித் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறினால், அவை மாணவர்களுக்கான கல்விச் சேவை என்பதிலிருந்து தடம்மாறி, முழுக்க முழுக்க இலாபமீட்டும் வணிக நிறுவனங்களாகவே மாறிவிடும். இதனால் உயர்கல்வியின் தரம் குறைந்து, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையும் உருவாகிவிடும்.

இச்சட்டத்திருத்தம் மூலம் ஆட்சிப்பொறுப்பெற்ற 100 நாட்களில் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைத்துள்ளதுதான் தவெக அரசின் மிகப்பெரிய சாதனையாகும். நாட்டின் எதிர்காலத் தலைமுறையினருக்கு அடிப்படையாக வழங்க வேண்டிய கல்வியைக் கூட வழங்க முடியாமல் தனியாருக்கு தாரைவார்ப்பதுதான் மக்களுக்கான ஆட்சியா? ஒரு புறம் சமூக நீதி அரசு என்று பெருமை பேசிக்கொண்டு, மறுபுறம் இது போன்ற கொடும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீடு முறையை ஒழித்து, ஏழை எளிய மாணவர்களை வஞ்சிப்பது தான் தூயசக்தியா? அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கி, விதிமுறைகளை தளர்த்தி, தனியார் முதலாளிகள் இலாபமீட்ட வழிவகுப்பதுதான் ஊழல், இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? வெட்கக்கேடு! தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பைச் சிதைத்து, ஏழை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பைப் பறித்து, கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.