வேளச்சேரியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குக- சீமான்
சாஸ்திரி நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வேளச்சேரி சாஸ்திரி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நெடுங்காலமாகப் போராடி வரும் நிலையில் திமுக அரசு தர மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.வேளச்சேரியில் அம்பேத்கர் நகர் மற்றும் கக்கன் நகர்ப் பகுதி மக்களுக்கு ஏற்கனவே மாதாந்திர தவணை முறையில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதைப்போலத் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று சாஸ்திரி நகர் மக்களும் போராடி வரும் நிலையில், அதனை வழங்காமல் திமுக அரசு பாகுபாடு காட்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
தமிழ் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கெல்லாம் உடனடியாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், உள்ளிட்ட அனைத்தும் வழங்கி, எவ்வித தங்கு தடையுமின்றி நிலம், வீடு வாங்கி வசதியாக வாழ வகை செய்யும் தமிழ்நாடு அரசு, இம்மண்ணின் பூர்வகுடி தமிழ் மக்களுக்கு மட்டும், அவர்கள் பல தலைமுறைகளாக நிலைத்து வாழும் வாழ்விடங்களில் வீட்டு மனை பட்டா வழங்க மறுப்பதும், ஆக்கிரமிப்பு என்று கூறி காவல்துறை மூலம் அவர்களை மிரட்டி விரட்டுவதும் என்பது இந்த ஆட்சியும் அதிகாரமும் யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது. இதுதான் திமுக அரசு தமிழ் மண்ணையும், தமிழ் மக்களின் மானத்தையும் காக்கும் முறையா? இதுதான் தமிழர்களின் உரிமையைப் பெற்றுத்தந்த முறையா? தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையின் மையப்பகுதியில் வாழும் தமிழ்த்தொல்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக அரசு விரட்டுவது என்பது கொடுங்கோன்மையாகும்.ஆகவே, வேளச்சேரி சாஸ்திரி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு விரைந்து வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.