☰
×

முருகப்பெருமான் திருவிழாவில் முதலமைச்சருக்கு துதிபாடுவதா?- சீமான் 

 

அரோகரா முழக்கத்தை முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர் ரமேஷுக்கும் எழுப்பியது வன்மையான கண்டனத்திற்குரியது; கோடிக்கணக்கான தமிழர்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற தமிழர்களின் தொன்மையான சூரன் போர் (சூரசம்ஹாரம்) பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கும் எழுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களின் உள்ளத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ள வெட்கக்கேடான செயலாகும்.

தமிழினத்தின் தொன்மையான வழிபாட்டு மரபின் அடையாளமாகவும், தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்பவர் நமது முப்பாட்டன் முருகப்பெருமான். அவரது வீரத்தையும், வெற்றியையும், அறத்தையும் போற்றிக் கொண்டாடும் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழா என்பது எவ்வித அரசியல் வேறுபாடுமின்றித் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வாகும். அத்தகைய சிறப்புமிக்க பெருவிழாவிலேயே முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்?

அதுமட்டுமின்றி, சூரபத்மனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டிய முப்பாட்டன் முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில், முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி, அவரைப் போல முருகப்பெருமான் பகையை வென்றதாகப் பொருள்படும் வகையில் பாடல் பாடியிருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்? முருகப்பெருமானின் வீரத்தை விளக்குவதற்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர்தான் அளவுகோலா? முருகப்பெருமானுடன் முதலமைச்சரை ஒப்பிடுவதே தவறெனும்போது, முருகனுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்தித் துதிபாடுவது எத்தகைய ஆணவப்போக்கு?

ஆட்சியாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பதவிகளையும், பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டையும், பண்பாட்டு மரபுகளையும் கொச்சைப்படுத்துவதா? பதவி மோகத்திற்கும், தனிமனிதத் துதிபாடலுக்கும் ஒரு வரம்பே கிடையாதா? ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காகக் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் பலிகொடுப்பதுதான் கலைஞர்களின் பணியா? இதற்குப் பெயர்தான் இறைபக்தியா? அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் செய்யும் அடிமைச் சேவகமா?

இதையெல்லாம் முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் செய்கிறார்களா? அல்லது முதலமைச்சரை மகிழ்வித்து அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக அவரைச் சுற்றியிருப்பவர்கள் தன்னிச்சையாக இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்களா? முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்தது என்றால், இத்தகைய செயலை அவர் இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழர்களின் இறைநம்பிக்கையைப் புண்படுத்தியவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கு முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் உரிய விளக்கமளிக்க வேண்டுமா, இல்லையா?

மக்கள் அளித்த பதவி என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்குத்தானே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கல்ல! ஆட்சியும் அதிகாரமும் இன்று வரும்; நாளை போகும். ஆனால், தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் பெருமையும், அவரை வழிபடும் மக்களின் நம்பிக்கையும் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அதனைத் தனிமனிதப் புகழ்ச்சிக்காக இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

எனவே, திருச்செந்தூர் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழாவில் முப்பாட்டன் முருகப்பெருமானின் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும், கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்படியொரு செயல் அரங்கேறியதற்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இனி எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடலுக்கு இடமளிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.