“காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- சீமான்
காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் தளத்தில், “தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடந்த 5 நாட்களுக்கு முன் IND TN 12 MM 6865 என்ற எண்கொண்ட விசைப்படகில் மீன்பிடிப்புக்குச் சென்ற மணப்பாடைச் சேர்ந்த, மீனவர்கள் 10 பேர், 5 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது அவர்களின் குடும்பத்தினரிடமும், அப்பகுதி மீனவ மக்களிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடித்தருமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மீனவ மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காத காரணத்தால் மீனவ மக்கள் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் உறவினர்களின் நிலையறியாது தவித்து நிற்கும் மீனவச்சொந்தங்களின் வேதனையைத் தீர்க்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு கடலோர காவற்படை மூலம் காணாமல் போன மீனவர்களை தேடுவதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? 5 நாட்களாகியும் காணாமல் போன 10 மீனவர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசிடம் பேசி உரிய தேடுதல் பணிகளை முடுக்கி விடாதது ஏன்? இதுதான் மீனவ மக்களின் நலன் மீது திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா? இதுதான் நம் மீனவச்சொந்தங்களை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? முதலமைச்சரோ, அமைச்சர் பெருமக்களோ, தொழிலதிபரோ வானூர்தி விபத்தில் காணாமல் போனால் பதறித்துடிக்கும் இந்த நாடும், அரசும், ஊடகங்களும், நடுக்கடலில் மீனவர்கள் காணாமல்போனால் எந்த சலனமும் இன்றி இருப்பதேன்?
அதிகாரத்தில் இருப்பவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும்தான் இந்த நாட்டில் மனிதர்களா? அவர்களுடைய உயிர் மட்டும்தான் மதிப்புடையதா? எளிய மீனவ மக்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா? அவர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லையா? வெட்கக்கேடு! பணக்காரனுக்கு ஒரு நீதி, பாமரனுக்கு வேறு நீதி என்பது சமூக நீதி அல்ல, அது மனித குலத்திற்கு மாபெரும் அநீதி! காணாமல்போன மீனவச் சொந்தங்களை விரைந்து மீட்டு அவர்களின், குடும்பத்தினரின் துயர்போக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரகளின் தலையாயக்கடமையாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் இனியேனும் சீரியக் கவனமெடுத்து, இந்திய ஒன்றிய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் துரிதப்படுத்தி, மீனவர்களை விரைந்து மீட்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.