×

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை! சிங்கப்பெண்கள் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?- சீமான்

 

கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தையின் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது. தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?

காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வேண்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது. கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலாளியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது.

ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீதான அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது. ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.