உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லி கேட்காத கர்நாடக அரசு விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? - சீமான்
காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக, கர்நாடகத்திற்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதா? போராடிப் பெற்ற உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இப்போக்கு பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயலாகும். கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை. காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனத் தன்முனைப்பின் உச்சமாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கானத் தார்மீக உரிமையை மறுத்து வருகிறது என்பதே மறுக்கவியலா பேருண்மை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒருநாளும் ஏற்றதில்லை. முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது, அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து, தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும், அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து, அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு. உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
கபினி, ஏமாவதி, ஏரங்கி என விதிகளை மீறி அணைகளைக் கட்டிய கர்நாடகா, அதேபோல தற்போது மேகதாதுவிலும் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழர்களுக்கும், காவிரிக்குமுள்ள வரலாற்றுவழிப்பட்ட உயிர்த்தொடர்பு முற்றாக அறுந்துபோகும்; காவிரிப்படுகைப் பாலைவனமாக மாறும். கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்? காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா? இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிடம் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது? உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா? உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2012ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடகத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தப் பயனும், தீர்வும் கிடைக்கப்பெறாது திரும்பி வந்ததெல்லாம் முதல்வர் விஜய்க்குத் தெரியாதா? ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுபோல, முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்து, விஜய்யின் அரசியல் பிம்பத்தை நிலைநாட்டுவதைத் தாண்டி, இச்சந்திப்பில் வேறென்ன பயன் விளையப் போகிறது? காவிரி நதிநீர் உரிமைப் பங்கீட்டுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், கருத்துக்களையும் பெற முயற்சி எடுக்காத தவெக அரசு, முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் துடியாய் துடிக்கிறது? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசைக் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் வைத்துக் கொண்டு, அங்கு போய் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் ஊடகச்செய்தியைத் தாண்டி, உருப்படியாக எந்தப் பயனையும் இது தரப்போவதில்லை.
கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால், சூன் 12ஆம் தேதி தண்ணீருக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி காவிரிப்படுகையில் மொத்தமாகப் பொய்த்துப் போனது. அடுத்தப் போகமான, சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதில் எவ்வித உறுதிப்பாடுமில்லை. காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும்கூட, அதனை ஏற்க மறுத்து, மேல்முறையீட்டுக்குச் செல்கிறது கர்நாடக அரசு. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்கப் போகிறார்? எதற்கு இந்த வறட்டுப்பிடிவாதம்? ஏற்கனவே, பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாது ஏமாற்றி, விவசாயிகளின் வயிற்றிலடித்த தவெக அரசு, இப்போது காவிரி நதிநீர்ச்சிக்கலையும் மிகுந்த மெத்தனப்போக்கோடும், அலட்சியப்போக்கோடும் கையாள்வது ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதற்கு நடுவர் மன்றம் கோரி, புதிய சிக்கலை இழுத்துவிடத் துணிந்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகா செல்வது வரலாற்றுப் பெருந்தவறாகும். இப்போது சூழல் சரியில்லாததால், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாமென்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார். எப்போதும் கர்நாடகாவுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையே செய்ய வேண்டாமென்று நாங்கள் கூறுகிறோம். தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.
ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.