×

நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கு ஜெய்பீம் பட பிரச்னையெல்லாம் ஒரு விஷயமா?- சீமான்

 

ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “2008ஆம் ஆண்டு கருங்கல்பாளையத்தில் பேசியது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக எங்கள் வழக்கறிஞர் எங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளனர். நீதிபதி 30-ஆம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் தர்க்கத்தை வைக்க சொல்லி உள்ளார். 30ஆம் தேதிக்கு பிறகு வழக்கின் போக்கு தெரியும். 

நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாததை போல் ஒரு திரைப்படத்தை சுற்றியே பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. ஒரு சிறந்த திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள்.மற்றொரு தரப்பில் வருத்தம் தெரிவிக்கிறார்கள், அதிலும் நியாயம் இருக்கிறது. நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கிறது. மழை, வெள்ளம் வடியவில்லை அதை யாரும் கவனிக்கவில்லை. ஊடகம் அது குறித்து பேசவில்லை. அணுக்கழிவை இங்கு புதைக்கலாம் என்கிறார்கள் அதை வைக்கலாமா கூடாதா என முடிவு எடுக்க வில்லை. எட்டு வழிசாலை எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், அன்னூரில் 2500 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்த உள்ளனர். இதற்கெல்லாம் ஊடகம் பேசவில்லை.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை சட்ட விரைவாக உறுதிசெய்யவேண்டும். 5 மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ரத்து செய்து இருக்கிறார்கள்.  அண்ணாமலை 500 ஆண்டுகள் ஆனாலும் ஒரு கமா கூட மாற்ற மாட்டோம் என சொல்லியிருந்தார். யாருக்கும் பயப்பட மாட்டோம் என கூறினார். இப்போது ஏன் திரும்பப் பெற்றார்கள்.  வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இழந்து விடும் என வேளாண் துறை அமைச்சர் சொல்லி இருக்கின்றார். வட மாநில தேர்தல் வருவதால் தற்போது சட்டத்தை திரும்பப் பெற்று இருக்கிறார். பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்.?  ஆள்வது யார்? அதிகாரமற்றவர்கள் வலிமையற்றவர்கள் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் பாஜக போராட்டம் நடத்துவதாக கூறுவது, ஒரு நாடகமாக ஏமாற்றுவதாக இருக்கிறது. 

தமிழக அரசு செயல்படவில்லை. தண்ணீர் ஓடாமல் கிடப்பதைப் போல தமிழக அரசும் செயல்படாமல் கிடைக்கிறது.   இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்விக் கொள்கை ஆர்எஸ்எஸ் கோட்பாடு. இதை அவசரம் அவசரமாக தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர். அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்லூரிகளில் அனைத்து மதத்தினரும் வேலை பார்க்கின்றனர். ஆனால் கொளத்தூர் இந்து கல்லூரியில் இந்து மட்டுமே பேராசிரியராக இருக்க முடியும் என அரசாணை வெளியிட்டு இருக்கிறார்கள். எங்களை பிஜேபி.ன் b team என சொல்கிறீர்கள்.  இந்துத்துவம் எது பாசிசம் எது என்பதை திமுக விளக்க வேண்டும். கல்லூரிகளில் ஆன்லைன் மட்டுமே தேர்வு நடத்தவேண்டும் ஆன்லைனில் பாடம் நடத்தி இருக்கிறார்கள். எனவே ஆன்லைன் தேர்வு நடத்துவதே சரி” எனக் கூறினார்.