“வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்”- ஐகோர்ட்டில் சீமான் பதில் மனு
நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ஆகியோர் பரஸ்பரம் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வருண்குமார் குறித்து பேசுவதற்கு சீமானுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் சீமான் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறை சென்றவர் வருண் குமார் என்றும்,
ராமநாதபுரம் எஸ்.பி. இருந்த போது ட்விட்டரில் தனது சொந்த கருத்துகளை பதிவிட்டதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் வருண்குமார் என்றும் இதுவே அவரின் நடத்தைக்கு சாட்சி என்றும் கூறப்பட்டுள்ளது. வருண்குமார் குறித்து தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரியாக அவரின் செயல்பாடு குறித்து மட்டுமே விமர்சித்ததாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமர்சனத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஐ.பி.எஸ்.அதிகாரியானார் என்பது தெரியவில்லை எனவும் சீமான், பதில்மனுவில் விமர்சித்துள்ளார். வருண்குமார் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டதாகவும் சீமான் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கெதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் பதில் மனுவில் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு, நீதிபதி தனபால் தள்ளிவைத்துள்ளார்.