×

பாஜக என்ன நினைக்கிறதோ அதையே திமுக செய்கிறது- சீமான்

 

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில கொள்கை பரப்புச் செயலாளர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயசீலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தால் பாதிக்கப்பட்டார். புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ஜெயசீலன் இல்லத்தில் ஜெயசீலன் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஜெயசீலன் சீமானிடம் பல மாத காலமாக விபத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உள்ளேன், என்னை இதனால் வரை நீங்கள் பார்க்க வரவில்லை நான் நாம் தமிழர் கட்சியை மட்டுமே நம்பி உள்ளேன் என்னை பார்க்க வராதது வருத்தம் அளிப்பதாகவும் தனது வேதனையை தெரிவித்தார். இதன் பின்னர் சீமான் அவருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ மியான்மரில் தமிழர்கள் சிக்கி தவித்து வருகின்றனர் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அரசு தமிழக அரசு தான், ஒன்றிய அரசிடம் கூறி இந்திய வெளியுறவு துறைக்கு அழுத்தம் கொடுத்து மீட்டுக் கொண்டு வர வேண்டும், இந்த ஒரு வழி தான் இருக்கிறது வேறு வழி இல்லை,நாங்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தான் வருகின்றோம். அறிக்கை வெளியிட்டு தான் வருகிறோம், ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கின்றனர். 

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா புதிதாக ஆட்சி அமைக்க வேண்டியது இல்லை. பாரதிய ஜனதா என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் திமுக செய்து வருகிறது. தமிழர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் செயல்பட்டு வருகிறேன், நான் தனித்து நிற்பது என்பது பல கோடி தமிழ் மக்களை நம்பியும் அவர்களது உணர்வுகளுக்காகவும் தான் செயல்படுகிறோம், அதனால் தனித்து என்கின்ற வார்த்தையை நாம் சொல்ல வேண்டியது கிடையாது, எங்கள் கட்சி தனித்து தான் போட்டியிடும் எங்களின் கொள்கை அது. நாங்கள் சமரசம் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கின்றோம். திராவிட இயக்கங்களின் கோட்பாடுகளில் ஊறி வளர்ந்து பெரியாரிய கருத்துக்களை பல மேடைகளில் தெருத் தெருவாக பேசியிருக்கிறேன். ஆனால் ஒரு காலகட்டத்தில் ஈழப் போரில் என் இனம் சாகும்போது எங்களுக்கான பட்டறிவு வருகிறது. இந்த அதிகாரங்கள் இந்த கட்சிகள் நமக்கானது இல்லை. இது நமது மொழியை பாதுகாக்கும் இனத்தை பாதுகாக்கும் நமது நிலத்தை பாதுகாக்கும் என்று நினைத்தது மிகப்பெரிய தப்பு என்பதை உணர்ந்ததற்குப் பிறகுதான் எங்களின் பாதை மாறியது.

எங்களைப் பொறுத்தவரை தோல்வியை சந்திக்க தயாராக உள்ளோம். எத்தனை தோல்வியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வோம் எங்களுக்கு தற்காலிக வெற்றி அவசியமல்ல.  நிரந்தரம் தான் வேண்டும் அதற்காக தோல்வியை விலையாக கொடுத்துள்ளோம். தோல்வியை தோல்வியாக கருதாமல் பயிற்சியாக எடுத்துக் கொள்கிறோம். எங்களைப் போல் சிலர் இருக்க முடியாது. ஆனால் நாங்கள் எங்களின் கொள்கை கோட்பாடு நாங்கள் வந்தால் எப்படி ஆட்சி நடத்துவோம் என்பதையெல்லாம் எடுத்துக் கூறி வருகிறோம்.‌ அது பிடித்து சேர்ந்து வேலை செய்யலாம் என்று வருபவர்களை நாங்கள் இணைத்துக் கொள்வோம். அப்படி தேர்தலில் பயணிக்காத சில அமைப்புகள் எங்களோடு இணைந்து தான் உள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை ஆனால் எங்களை ஆதரிக்கின்றனர்.

இந்தியாவில் இருந்த பிரதமர்களில் சிறந்த பிரதமர் வி பி சிங்க்தான் அவர் இரண்டாம் ஆண்டு காலம் பிரதமராக இருந்தார்.  மூன்றாவது அணி என்று அமைத்து அவ்வாறு வரும் பொழுது தான் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி வரும். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். பாஜக ஆட்சி செய்வது அதற்கு மாற்றாக காங்கிரஸ் ஆட்சி செய்வது சர்வாதிகாரம் என்று கூட சொல்ல முடியாது ஒரு கொடுங்கோன்மை போக்கில் கொண்டு சென்று விடும். எந்த மாநில உரிமையும் நிற்காது. எந்த மாநில உரிமையை பற்றியும் கவலைப்படாது. பாஜகவுக்கு மாற்று என்று நடைப்பயணம் ராகுல் காந்தி மேற்கொள்ளவில்லை இந்தியா ஒற்றுமை பயணம் என்றுதான் நடைபயணம் செல்கிறார். நடந்து போனால் பாஜகவை வீழ்த்தி விடலாம் என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாமே.

மேற்கு வங்காளத்தில் மம்தா தமிழ்நாட்டில் ஒரு கட்சி, சந்திரசேகர ராவ் மாயாவதி மலையாம் சிங் லல்லு பிரசாத் நிதீஷ்குமார் உள்ளிட்டோரெல்லாம் இணைந்து ஒரு அணியை உருவாக்கி அப்படி வரும் பொழுது தான் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என தானாக வரும். அப்படி வரக்கூடிய சூழலைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.