''குவார்ட்டர் பாட்டில்களை இலவசமாக கொடுக்காதது ஏன்?'' - சீமான்
விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு, குவார்ட்டர் பாட்டில்களை இலவசமாக கொடுக்காதது ஏன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் மதம் மாற மாணவிக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை ஏற்க முடியாது. பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூட கிறிஸ்துவ பள்ளிகளில் படித்தார்கள் அவர்களை யாரும் மதம் மாற்றவில்லை. தஞ்சை மைக்கேல்பட்டி மாணவி விவகாரத்தில் பா.ஜ.க செய்தது ஒரு அரசியல் தான். மனிதம் தான் அரசாட்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் மட்டும் வாழும் நாடாக இந்த நாடு இருக்க வேண்டும் என ஒரு கட்சி கூறுகிறது. மதமும் ஜாதியும் ஆட்சி செய்யுமென்றால் நாடு சுடுகாடாக மாறி விடும். மனிதம் தான் புனிதம். மொழிவழிதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தை முன்னிருத்தி ஒரே நாடு ஒரே மதமாக மாற்ற முடியாது. பாஜகவின் வெறுப்பரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.
விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு, குவார்ட்டர் பாட்டில்களை இலவசமாக கொடுக்காதது ஏன்? பிப்.21ல் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிப்பேன். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதையும் அறிவிப்பேன். தேர்தல் அறிக்கையை வெளியிட மாட்டேன். மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு வரும் 21ஆம்ேதேதி திருச்சியில் நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சியின் மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். 5000 ரூபாயை நாங்க கேட்கவில்லையே.. இதனை எதைவைத்து கட்டுவீங்க? யாரு காசு இது?” எனக் கேள்வி எழுப்பினார்.