×

“நாம் வாக்கை போடுவோம், அவர்கள்  வாக்கரிசி போடுவார்கள்”- சீமான்

 

மேட்டூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வந்தார்.


பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஆணவ படுகொலையை தடுக்க குழு அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். இதுவரை 32 குழுக்கள் அமைத்திருக்கிறார்கள். ஏதாவது இயங்கி இருக்கிறதா? ஒரு சம்பவம் நடந்திருந்தால், அந்த சம்பவத்தில்  என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்தால் தான் விசாரணை செய்ய வேண்டும். விசாரணை என்பது யாரை ஏமாற்றுகிற செயல். இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலை, தங்கை ஸ்ரீமதி விசாரணை குழு இதுவரை என்ன செய்திருக்கிறது? இந்த நூற்றாண்டில் ஜாதிக்காக கொலை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஜாதிக்காக கொலை செய்வதை விட்டு விட்டு , ஜாதியை கொலை செய்துவிடு என்கிறோம். அதற்காக குழு விசாரித்து சொல்வோம் என்று சொன்னால் அது எப்பொழுது சொல்லும்.

நான்கு மாதத்தில் தேர்தல் வர உள்ளது. அதற்காக தான் ஒரு குழு போட்டிருக்கிறோம், அது முடிவு சொல்லும் என சொல்வதற்காக தான் இது. வறுமையின் காரணமாக செம்மரம் கட்டை வெட்ட ஆந்திரா சென்றவர்களை சுட்டு கொலை செய்தனர். அவர்களின் குடும்பத்திற்கு அரசு என்ன செய்தது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும், நடிகனை பார்க்க வந்து உயிரிழந்தவர்கள்  எல்லோரும் நான் பணம் தருகிறேன் என்று சொல்கின்றனர். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சுட்டுக்கொன்ற மக்களை யாராவது போய் பார்த்தார்களா? நிதி கொடுத்தார்களா? விருத்தாச்சலத்தில் இடி தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு யாராவது நிதி உதவி செய்தார்களா? விண்வெளியில் வித்தை காட்டுகிறேன் என்று கடற்கரையில் கூடிய கூட்டத்தில் 15 பேர் இறந்தனர். அவர்களுக்கு எந்த ஒரு வருத்தமும் நிதியோ தரவில்லை. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தால் அவர்களை பார்த்து வணக்கம் செலுத்தி நிதி உதவி அளித்தார்களா?.  எதை நோக்கி இந்த நாட்டை நகர்த்துகிறீர்கள். நாம் வாக்கை போடுவோம், அவர்கள்  வாக்கரிசி போடுவார்கள்.

ஆளுநர் - ஆளுகிற பிஜேபி ஆர்எஸ்எஸ் உறுப்பினர். இந்திய ஒன்றியத்தை  ஆளுகின்ற பாஜகம் எந்த மாநிலத்தில் அதிகாரம் இல்லையோ? அந்த இடத்தில் அவர்களது ஆட்களை அமர்த்தி எந்த ஒரு நல திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  எல்லோரும் சேர்ந்து ஒரு சட்டத்தை, தீர்மானத்தை நிறைவேற்றி வரைவுக்கு  அனுப்பினால், அதிகாரம் இல்லாத ஆளுநர்  கையெழுத்து போட்டால் தான் செல்லும் என சொன்னால், இது மக்களாட்சி, ஜனநாயகம் ஆட்சி என்று சொன்னால் எப்படி இதை நம்ப முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி இருக்கும். இதை மக்களாட்சி என்று எப்படி சொல்ல முடியும். புதுச்சேரியில் ஒரு நலத்திட்டங்களையும் நிறைவேற்ற விடவில்லை கிரண்பேடி. எந்த மாநிலத்தில் பிஜேபி ஆளவில்லையோ, அந்த மாநிலத்தில் அவர்களாகவே ஆய்வு செய்யப் போகிறோம் என்று சென்று , எதையும் நிறைவேற்ற விடுவதில்லை. இது தான் ஒன்றிய அரசு” என்று சாடினார்.