“ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தால்கூட பெரியார் தான் காரணம்னு சொல்வாங்க”- சீமான்
ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தால் கூட பெரியார் தான் காரணம் என்று சொல்வார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் தேசியவாதி குணாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தமிழ் தேசியவாதிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சீமான், திராவிடம் என்ற பெயரில் தமிழ் பாரம்பரியத்தை நீண்ட நாட்களாக மறைத்து வைத்து சதி செய்துள்ளதாக விமர்சித்தார். அதுமட்டுமின்றி தமிழர்கள் படித்ததற்கு காரணமே பெரியார் தான் என்றும் தமிழ்நாட்டில் எந்த நன்மை நடந்தாலும் அதற்கு பெரியார் தான் காரணம் என்றும் தொடர்ந்து திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வதாக குறிப்பிட்டார். உதாரணத்திற்கு பக்கத்து வீட்டில் மாடு கன்று போட்டால் கூட அதற்கு பெரியார் தான் காரணம் என்றும் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தால் கூட அதற்கும் பெரியால் தான் காரணம் என்று திமுகவினர் கூறுவார் என சீமான் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.
பெரியார் அரசியல் செய்யும் காலத்தில் அவருடன் அரசியல் செய்த அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் இரட்டை பட்டங்கள் பெற்றவர்கள் எனவும் அவர்களை எல்லாம் படிக்க வைத்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார். 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் உலகப் பொதுமறையை எழுதியுள்ளதாகவும், அப்படி என்றால் திருவள்ளுவருக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தது யார் என்றும் அவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர் தேசியவாதம் என்ற பெயரிலும் திராவிடம் என்ற பெயரிலும் தமிழர்களையும் தமிழ் பாரம்பரியங்களையும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.