×

ஸ்டாலினை "CM சார்" என்று அழைப்பது, பொது மக்கள் இறந்த செய்தியை விட வேதனை- சீமான்

 

சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருதுநகர் வந்திருந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த சீமான், “காமராஜர் ஆட்சியில் எளிமை இருந்தது. தற்போது அரசியல் ஆட்சியில் ஆடம்பரம் உள்ளது. திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம் அதிகளவில் உள்ளது. திரைக்கவர்ச்சி போதையில் உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் வருவதால் மத்திய ஒன்றிய அரசு உண்மை கண்டறிய குழு, பாஜக, காங்கிரஸ் குழு அமைந்துள்ளது. தூத்துக்குடி ஸ்ட்லைட் துப்பாக்கி சூடு, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், செம்மரக்கட்டை தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த போதும் மத்திய குழு அமைக்க வில்லை. இனிமேல் இதுபோன்று நடக்காது என்று எந்த கட்சியும் தெரிவிக்கவில்லை. இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது வாய்க்கரிசி. விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் எனக்கு உடன்பாடு இல்லை. 

விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும். ஒரு தலைவன் படையை வழிநடத்தினால் அது படையாக இருக்கும். தலைவனை படை வழிநடத்தினால் அது தலைவனாக இருக்க முடியாது. இந்த மாதிரியாக நடத்தவில்லை என்றால் பாடை தான் வரும். இதை பேசி பயனில்லை.  கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜயின் குஷி 2 படத்தின் வெளியிட்டு விழா திரையரங்கு வாசலில் இளம் பெண்களும் இளைஞர்களும் ஆட்டம் போட்டு கொண்டாடுவது மனது எப்படி நிம்மதியாக இருக்கும்.  கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் அவருக்கு இதயத்தில் காயமோ வலியோ இல்லை. அதை கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. கரூரில் நடிகர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு சென்றதால் தான் துயர சம்பவம் நடந்துள்ளது. அவர் அங்கு செல்லாமல் இருந்தால் இச்சம்பவம் நடைபெற்று இருக்காது. இதற்கு யார் காரணம்? சுற்றுப்பயணம் மேற்கொண்ட மற்ற இடங்களில் எல்லாம் நடைபெறாதது, இங்கு மட்டும் ஏன் நடைபெற்றது என்று கேட்பது அங்கும் இதே நிலை நடக்கவில்லையா என்று எதிர்பார்க்கிறீர்களா? 

விஜய்க்கு எல்லா கூட்டத்திலேயுமே பொதுமக்கள் மயங்கி விழுந்தனர். அதேபோல கரூரிலும் மயங்கி விழுந்தனர். கரூரில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்த்தேன். காயம் அடைந்தவர்களுக்கு ஒருவருக்கு கூட கத்தியால் குத்திய காயம் எதுவுமே இல்லை. கை, கழுத்து உள்ளிட்டவைகளில் கால்களால் மிதித்த காயங்களே இருந்தன. வீடியோ வெளியிட்ட விஜய் உருக்கமாக பேசி வெளியிட்டு இருக்க வேண்டும். விஜய் பேசியது திரைப்பட வசனம் மாதிரியாக இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை இல்லை. சிஎம் சார் என்று சொல்வதே சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது. ஸ்டாலின் மீது மதிப்பில்லாமல் இருக்கலாம். அவர் வகிக்கும் பதவிக்கும் முதல்வர் பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும். கரூர் இறப்பு சம்பவத்தை விட இந்நிகழ்வு வருத்தம் அளிக்கிறது. அரசியலுக்கு இதற்கு முன்னதாக மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் , கமல்ஹாசன் ஆகியோர் கட்சி தொடங்கியுள்ளனர்.இது போல் எதுவும் நடைபெற்றது இல்லை” என்றார்.