×

“அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிதான்... என்னை கூட்டணிக்கு அழைத்த பாஜகவுக்கு நன்றி”- சீமான்

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மாநில தலைவர் கூட்டணிக்கு அழைத்ததற்கு நன்றி, ஆனால் நான் யாருடனும் கூட்டணியில் நிற்கப் போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அதிமுகவும் ஒரு ஊழல் கட்சி தான், திமுக- அதிமுக என வேறுபாடு கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மாநில தலைவர் கூட்டணிக்கு அழைத்ததற்கு நன்றி, ஆனால் நான் யாருடனும் கூட்டணியில் நிற்கப் போவதில்லை. ஒரு கட்சி தன்னுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து அழைப்பது இயல்புதான். நீண்ட கால அழைப்பு, ஆனால் எனது ஒரே நிலைப்பாடு தான். அதை திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறேன், எங்களது கொள்கை அது கிடையாது. நாங்கள் முழுக்க முழுக்க மக்கள் அரசியல் செய்து வருகிறோம். மக்களை தேடி மக்களுக்காக அரசியலை செய்து வருகிறோம்.

வெற்றி, தோல்வி அதைத் தாண்டி ஐந்தாவது இடத்தில் ஒரு கட்சி தனித்துப் போட்டியிடுக்கிறது என்றால் அது நாங்கள் தான். எங்களது பயணம் எங்களது கால்-ஐ நம்பித்தான் உள்ளது. எங்கள் விடுதலை எங்கள் கையில் என்பதுதான் எனது தலைவர் எனக்கு கற்பித்தது. பிறர் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என காட்டுவதை விட்டு தனித்து நின்று, தான் உயர்ந்தவன் என்பதை காட்டுவேன். மனிதனில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. சிந்தனை என்பதே சமூகத்தின் விளைச்சல். கத்தி எடுத்து குத்தும் மனதை உருவாக்கிய உள்ளது! அப்படி என்றால் எப்படிபட்ட பாடத்தை பள்ளி புகட்டி உள்ளது.. ஒரு தலைமுறை எப்படி தயாராகியுள்ளது. கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்று வருகிறது, ஒரு குற்ற சம்பவத்தை இந்த அரசு எப்படி போதித்து வருகிறது. தற்போது உள்ள அரசின் அதிகபட்ச நடவடிக்கை அதிகாரிகளை இடம் மாற்றுவது மட்டுமே... அரசுக்கு எதுவும் தெரியாதா? அங்கு இருக்கும் அதிகாரிகள் மட்டுமே அதற்கு பொறுப்பானவர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.