அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய சீமான்
தனது தாயாருடன் சென்று அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் இல்லத்திற்கு இன்று 09-07-2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 5 இலட்சம் ரூபாயை துயர் துடைப்பு நிதியாக வழங்கினார். அஜித்குமார் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து இறுதிவரை துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எவ்வளவு வலியை அனுபவித்திருப்பார் அஜித்குமார், திருடப்பட்ட நகையை மீட்டு விட்டீர்களா? அந்த வழக்கின் நிலை என்ன? குற்றவாளியாக இருந்தாலும் காவல் நிலையத்திற்கு தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். புகார்தாரர் நிகிதா மீது மோசடி குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், அவரை ஏன் கைது செய்து விசாரிக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.