×

தமிழின தொன்ம வரலாற்று அறிவுப்பெட்டகம் ஐயா ஒரிசா பாலுக்கு எனது கண்ணீர் வணக்கம் - சீமான்

 

கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல்  பேரறிஞர்,  தமிழர்களின் அறிவார்ந்த  கடல் ஆளுகை திறனை தமது ஆய்வின் மூலம் நிறுவிய பெருந்தகை, உலக தமிழர்களால் ஒரிசா பாலு என்று அன்போடு அழைக்கப்படும் ஐயா உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனத்துயரமும் அடைந்தேன்.  ஐயா ஒரிசா பாலு அவர்கள் தமது 25 ஆண்டுகால ஆய்வுகளின் மூலம் ஆமைகளின் தொலையுணர்வு, பருவக்காற்று, கடல் நீரோட்டம், பறவைகளின் இடப்பெயர்வு
குறித்து ஆராய்ந்து அதன் மூலம் தமிழர்களின் தொன்மம், கப்பல் தொழில்நுட்பம், கடற்பயணங்கள், வணிகம், உலகத்  தொடர்புகள், குறித்த பல வரலாற்றுச் செய்திகளை  நிறுவிய பெருமைக்குரியவர்.

குமரிக்கண்டம் குறித்தும், உலகெங்கிலும் தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும் இடங்கள் குறித்தும் ஐயா ஒரிசா பாலு அவர்கள் ஆய்ந்தறிந்து கூறிய உண்மைகள் யாவும் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த தொன்மப்பேரினம் என்பதற்கான காலத்தால் அழியாத பெருமிதச் சான்றாகும்.  தமிழர் வரலாற்று பேராவணங்களாக திகழும்  ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தொல்லியல்  ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதோடு,  2000க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழர் வரலாற்று பெருமைகளை உலக்கெங்கிலும் கொண்டு சேர்த்த புகழுக்குரியவர். பண்டைய தமிழர் வாழ்வியல், வரலாறு, பண்பாடு, தொல்லியல், மொழியியல், மெய்யியல், தொழில்நுட்பவியல், வேளாண்மை, வணிகம், மருத்துவம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐயா அவர்கள் செய்த ஆய்வுகளும், உலகின் முன் நிறுவிய உண்மைகளும்  உலகத்தமிழர்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுக்கூரப்படும்.