பீகார் இளைஞர் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்- சீமான்
தலைநகர் சென்னையில் பீகார் இளைஞர் கௌரவ் குமார் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தம்பி கௌரவ் குமார், அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. மது போதையில் வடமாநில இளைஞர்கள் கௌரவ் குமாரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளதோடு, தடுக்க முயன்ற கௌரவ் குமாரையும், ஏதுமறியா அவர்களது 2 வயது குழந்தையையும் கொன்றுள்ள கொடூர நிகழ்வு நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது. தலைநகரிலேயே நடைபெற்றுள்ள இக்கொடூர நிகழ்வு காவல்துறை என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா? இயங்குகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டில் பட்டப்பகலில் கூட மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுமையான சூழல் நிலவுவது, திமுக ஆட்சியில் எந்த அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத, உலகமே வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மிகச்சிறப்பான ஆட்சியா? வெட்கக்கேடு!
இக்கொடூர கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வடமாநிலத்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள கொடூர குற்றத்திற்கு மூல காரணமாகும். அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள மதுக்கடைகளை மூடுவதில் திமுக அரசிற்கு இன்னும் என்ன தயக்கம்? நாட்டு மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை விடவும் அரசின் வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா? ஈவு இரக்கமின்றிக் கொலை செய்யப்பட்ட தம்பி கௌரவ் குமாரின் 2 வயது குழந்தையின் உடல் குப்பைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட கொடுமை நெஞ்சை உலுக்குகிறது. தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் உள்நுழைவுச் சீட்டு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சி போராடி வரும் கோரிக்கையானது, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு மட்டுமானதல்ல: வேலை தேடி வரும் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை உறுதி செய்வதற்கும் உள்நுழைவுச் சீட்டு மிகமிக இன்றியமையாததாகும். ஒன்றிய, மாநில அரசுகள் உள்நுழைவுச் சீட்டு முறையை முழுமையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் தற்போது அடையாறில் கொலையுண்டவர்கள் மற்றும் குற்றத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் குறித்த தகவல்களைத் தேடி அலைந்த அவலநிலை தமிழ்நாடு காவல்துறைக்கு ஏற்பட்டிருக்காது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும், போதைப்பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும், வடமாநிலத்தவர் குறித்த உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி போராடி வருகின்றது. ஆனால், ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் மீதமிருக்கும் இரண்டு மாதங்களில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை மக்கள் முற்று முழுதாக இழந்துவிட்டனர். கட்டுக்கடங்காது நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையும், அதன் காரணமாக நடைபெறும் கொடூர படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொள்ளப்போகிறதோ என்று மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். திமுக அரசை அகற்றி நல்லதொரு அரசை நிறுவுவது ஒன்றே தமிழ்நாட்டு மக்கள், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான ஒற்றை வழியாகும். ஆகவே, சென்னையில் பீகார் இளைஞர் தம்பி கௌரவ் குமார் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட கொடூர குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு சட்டத்தின் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.