விரைவில் அதிமுக என்ன நிலைமையில் இருக்கும் என்று பாருங்கள் - அமைச்சர் அருண் ராஜ்..!!
கோவையில் அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது; திமுக தலைவர்கள் தொடர்ந்து இப்படி பேசிக் கொண்டிருப்பது நல்லது தான். எங்கள் தலைவர் சொன்னதைப் போல, மக்கள் தீர்ப்பை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல் இருந்தால் திமுக எப்படி நன்றாக இருக்கும்?
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை, 99 சதவீதம் கிடையாது. வெளிநாடுகளில் படித்த மருத்துவர்கள், முதுகலை படித்தவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இல்லை, செவிலியர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. அதுபற்றி நாங்கள் பேசியிருக்கிறோம்.
தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து மேலோட்டமான கையேடு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத்துறை சார்ந்த அமைச்சர்கள் அதனை தமிழக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மட்டுமல்ல பல்வேறு கட்சிகளில் இருந்தும் தவெக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவரை அரவணைக்கிறோம்.
அதிமுகவில் இருந்து ஏன் வருகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
அதிமுக 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாகத் தான் போயுள்ளது.2024ல் வேண்டாம் என்று சொல்லி விட்டு, 2026 தேர்தலில் பாஜவுடன் சேர்ந்தார். குறிப்பாக, மக்கள் தீர்ப்பை மதிக்காமல் திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆகலாம் என்று நினைத்தார் பாருங்க, அதைப் பிடிக்காமல் தான் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். விரைவில் அதிமுக என்ன நிலைமையில் இருக்கும் என்று பாருங்கள், இவ்வாறு அவர் கூறினார்.