×

டிச.8 முதல் டிச.13 வரை பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு..! எந்தெந்த மாநிலங்களில்?

 

டிசம்பர் 8ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா நடைபெறவுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி 7 மாவட்டங்களில் டிசம்பர் 9ஆம் தேதியும், 7 மாவட்டங்களில் டிசம்பர் 11ஆம் தேதியும், சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 10, 11 என இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25,000 பள்ளிகள் இருக்கும் நிலையில் சுமார் 18,000 பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பிற்கு மட்டும் வகுப்பறைகள் செயல்பட முடியாத நிலை காணப்படுகிறது.10ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள சூழலில், ஆசிரியர்களின் போராட்டம் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இதனால் இந்த வாரம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகாலயா மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரர் பா டோகன் நெஙிஞ்சா சங்மாவின் நினைவு நாளை ஒட்டி வரும் 12ஆம் தேதி அன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக 11ஆம் வகுப்பிற்கு நடைபெறவிருந்த இன்டர்னல் தேர்வுகள் வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான வரும் 13ஆம் தேதி அன்று பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்பது கவனிக்கத்தக்கது.