×

கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை.. 

 

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்  தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.  

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும்,  கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. 

குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை தாலுகாவில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டுள்ளார்.