×

இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. 

 

கனமழை காரணமாக  தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 21ம் தேதி  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ள நிலையில், இன்று  (23ஆம் தேதி) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற உள்ளது . இதனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழக ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

அதற்கேற்ப  கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் கனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. இதனால் கோவை ரயில் நிலையம்,  மருத்துவமனை சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, அவினாசி சாலை என பல இடங்களில் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு , வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.  இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. 

இதனால் மாணவர்களின் நலன் கருதி  கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.