பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி
அந்தியூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்-மகேஸ்வரி தம்பதியினர். கூலி தொழிலாளிகளான இவர்களின் மகள் சுகன்யா (15), அருகில் உள்ள குரும்பபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் மாலை பள்ளி முடிந்து பேருந்துக்காக பள்ளியின் வெளியே தனது தோழிகளோடு காத்திருந்து உள்ளார். அப்போது திடீரென மயங்கி வலிப்பு வந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து வெள்ளிதிருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த வெள்ளி திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொண்டதும் தெரியவந்தது. பள்ளிக்குச் சென்ற மாணவி பேருந்துக்காக காத்திருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.