பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவன் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குன்னூரில் பள்ளி மாணவன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பெற்றோர் மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி அனுசியா. இவர்கள் இருவரும் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் புகழேஷ் (வயது 14) சிம்ஸ் பார்க் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும்போது சக மாணவர்களுடன் குன்னூரை நோக்கி நடந்து வந்தார். அப்போது மயக்கம் ஏற்பட்ட நிலையில் மாணவன் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக புகழேஷை ஆட்டோவில் ஏற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அப்போது மாணவன் புகழேசை பரிசோதித்த டாக்டர்கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதைத் தொடர்ந்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே பள்ளிக்கு சென்ற மாணவன் திடீரென உயிரிழந்ததால் மாணவனின் பெற்றோரும் கிராம மக்களும் குன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, கத்தி கூச்சலிட்டனர். மாணவன் புகலேஷ் சக மாணவர்களுடன் சண்டையிட்டதில் கீழே விழுந்து உயிழந்தாரா? அல்லது வலிப்பு ஏற்பட்டு உயிர் இழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
......