☰
×

"விடுமுறை நாளிலும் கிளாஸ் எடுத்தா ஸ்கூல் லைசென்ஸ் காலி!" – தனியார் பள்ளிகளுக்குப் பாய்ந்த அதிரடி உத்தரவு!

 

தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளிலும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, நர்சரி / மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள்) ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு அரசு பொது விடுமுறை நாட்கள்;

அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகள், சிறப்பு வகுப்புகளும் நேரடியாகவோ, இணையவழி மூலமாகவோ நடத்தக்கூடாது என்பதை இவ்வியக்ககம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுரைகளை மீறி எவ்வித பள்ளியும் செயல்படக்கூடாது. அவ்வாறு விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள், 2023-ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தனியார் பள்ளிகள்) அனைத்து பள்ளிகளின் நிருவாகங்களுக்கும் உரிய அறிவுரை வழங்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

 

மேலும், 'அரசு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளியில் விடுமுறை அறிவித்தவுடன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்பது விதிமுறையாக உள்ளது. ஆனால் அதனை மீறி தனியார் பள்ளியில் தொடர்ந்து வகுப்புகள் நடத்துவதால், மாணவர்களும் பெற்றோர்களும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் அமைச்சர் அலுவலகத்தின் அறிவுரை அடிப்படையில் பள்ளிகளில் கட்டாயம் விடுமுறை விட வேண்டும் எனவும், மாணவர்களை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது' என்றும் தனியார் பள்ளி இயக்குநரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.