×

சில தினங்களில் மட்டுமே பட்டியலினத்தவர் கோயிலுக்கு செல்ல அனுமதி- மாவட்ட ஆட்சியர்

 

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பட்டியல் இனத்தவர் கோயிலில் அனுமதிக்க முடியாது என்று கூறி வந்த விவகாரத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் கடந்த மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழாவின்போது அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தவரை கோயிலில் அனுமதிக்க முடியாது என்று கூறி அவர்களை தடுத்து தாக்கியது, தொடர்பாக இருதரப்பு தகராறு  ஏற்படடது. இதையடுத்து மேல்பாதி கிராமத்தில் கடந்த 45 தினங்களாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பட்டியல் இனத்தவரை கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே அரசு சார்பில் முயற்சி செய்து இரண்டு முறை கோட்டாட்சியர் தலைமையிலும்,ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்படாத நிலையில், இன்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில், விழுப்புரம் எஸ்பி பொறுப்பு மோகன்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மேல் பாதி கிராமத்தைச் சார்ந்த பட்டியல் இனத்தவர் மற்றும் வன்னியர் தரப்பினர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதன்படி பட்டியல் இனத்தவரை கோயிலில் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளரிடம் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பழனி, “இன்று நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்றொரு தரப்பினர் சம்மதம். எந்த தேதியில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்வது என்பது பிறகு தெரிவிக்கப்படும்” என்றார்.