×

மாரிதாஸ் கைது அவசியமா என்பதுதான் கேள்வி- சவுக்கு சங்கர்

 

மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம்.  சட்ட மீறல் இருக்கலாம்.   அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள்.   ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி என யூடியூபர் சவுக்கு சங்கர் கருத்து கூறியுள்ளார்.

யூடியூப் நேர்காணல் ஒன்றின்போது, ​​தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பல மாநில அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் யூடியூபர் மரிதாஸ், மதுரையில் உள்ள சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) 79 மற்றும் 353(2) பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66D பிரிவின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை பதிவுகளின்படி, ஜூன் 8, 2026 அன்று காலை சுமார் 10.10 மணியளவில், மதுரை, அழகர்கோயில் பிரதான சாலையில் உள்ள TWAD நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில், “மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம்.  சட்ட மீறல் இருக்கலாம்.   அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள்.   ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.  குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார்.   தடயங்களை அழித்து விடுவார்.    சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன.   அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?  உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள்.   கவனமாக இருங்கள் முதல்வரே” எனக் குறிப்பிட்டுள்ளார்.