என்னை கொலை செய்ய திட்டம்- சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
என்னை கொலை செய்ய அருண் IPS திட்டமிட்டுள்ளதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய யூடியூபர் சவுக்கு சங்கர், “என்னை கொலை செய்ய மும்பையை சேர்ந்த ஒரு கூலிப்படையை அருண் ஐபிஎஸ் அமைத்துள்ளார். இதனை எனக்கு டெல்லி உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். இந்தியாவில் யாருக்கும் நடக்காத அவலம் எனக்கு நடக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமும் அருண் என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார். என் சமையலறையில் மேசையில் மலத்தையும், சாக்கடையையும் வீசிய கொடுமை நடந்துள்ளது.
தற்போது சட்டம்-ஒழுங்கு பிரிவில் அருண் இருந்திருந்தால், என் மீது 15 வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். தற்போது அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பதால், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக கூலிப்படையை நியமித்துள்ளார். முதல்வர் விஜயிடம் இது தொடர்பாக வலியுறுத்துவேன். அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கத் தகுதியில்லாத நபர். இதை நான் மட்டும் சொல்லவில்லை. சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் கூறப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.