×

மு.க. ஸ்டாலின், உதயநிதி மீது சவுக்கு சங்கர் போலீசில் புகார்

 

திரையரங்குகளில் சட்டவிரோதமாக சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து பல கோடி ரூபாய் சுருட்டியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11 ஆம் தேதி அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் வெளியாகின.  துணிவு, வாரிசு படங்களின் சிறப்பு காட்சிகள் ஒளிப்பரப்பியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி பனீந்தர ரெட்டி ஆகியோர் மீது சவுக்கு சங்கர், சென்னை ஆலந்தூரில் உள்ள விஜிலன்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என சவுக்கு சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என குற்றஞ்சாட்டிய அவர், மகன் நிறுவனம் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக திரையரங்குகளில் சட்டவிரோதமாக சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் மூலம் திமுக அரசு உளவுப்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.