×

சவுக்கு சங்கர் வழக்கு : விசாரணையில் இருந்து அடுத்தடுத்து விலகும் நீதிபதிகள்..

 

யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.  

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை  சிறைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். எதிர்த்து அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் பல்வேறு  வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாய் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வழக்கின் விசாரணையில் இருந்து விலகுகிறோம். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.” என்று கூறி வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.  இதனையடுத்து  பொறுப்பு தலைமை நீதிபதி,  எந்த அமர்வுக்கு இந்த வழக்கை ஒதுக்கீடு செய்கிறாரோ அந்த அமர்வு தான் இனி  சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்கும்.


முன்னதாக சவுக்கு சங்கர்  குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வில், நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தும், நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.  நீதிபதிகளின் இரு வேறுபட்ட தீர்ப்பு காரணமாக  மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரனுக்கு பட்டியலிடப்பட்டது.  ஆனால் அவரோ இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனக்கூறி  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார். 

அதன்பின்னர் மீண்டும் சவுக்கு சங்கரின் தாயார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், தான் இந்த வழக்கிலிருந்து விலகுவதாகவும்,  தான் இடம்பெறாத அமர்வு முன் மனுவை பட்டியலிடுமாறும் கூறி  தலைமை நீதிபதிக்கு கோப்புகளை அனுப்பிவைத்தார். சவுக்கு சங்கர் வழக்கிலிருந்து அடுத்தடுத்து நீதிபதிகள் விலகுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.