×

மழைநீர் வடியாத பகுதிகளில் அம்மா உணவகங்ளில் இலவச உணவு வழங்க வேண்டும்- சசிகலா

 

மழை வெள்ளநீர் வடியாத குடிசைப் பகுதிகளுக்காவது அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் அவர்கள் இந்த மழை சீசன் முடியும் வரை அம்மா உணவகஙளில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஐந்தே நாட்கள் ஆன நிலையில் இன்று முதல் அம்மா உணவகங்களில் சாப்பிடும் உணவுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இன்றைக்கும், அநேக இடங்களில் வீடுகளில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீர் வடியாமல், அதனை அப்புறப்படுத்த போராடி வருகின்றனர். மேலும் இங்குள்ள மக்கள், மாநகராட்சியால் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள் மட்டும் இல்லாமல், கழிவுநீர் கலந்த வெள்ளநீர் தேங்கிய அதே குடிசை வீடுகளிலேயே தங்கி இருக்கின்றனர். இதுபோன்று பாதிப்படைந்த குடிசை வீடுகளில் உள்ள மக்களால் தங்களது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடர முடியாமல் குறிப்பாக தங்கள் சமையலறையில் சமையல் செய்ய இயலாது தவித்து வருகின்றனர். 

மேலும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முற்றிலுமாக மழைநீரை அப்புறப்படுத்தி அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பும் வரையாவது அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும். மேலும் வெள்ளநீர் வடியாத குடிசை வீடுகளுக்கு, மாநகராட்சி சார்பாக மூன்று வேளையும், உணவு தயாரித்து வாகனங்களில் எடுத்து சென்று அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே சென்று வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என்று வேளாண்மைத்துறை அறிவிப்பு செய்துள்ளது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்னும் மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருப்பதால், விவசாயிகள் பல இடங்களில் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்ய ஏதுவாக குறைந்தது இரண்டு வாரங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.