×

பராமரிப்பு என்று சொல்லி அடிக்கடி வீடுகளில் மின் வெட்டு- சசிகலா கண்டனம்

 

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை ஏற்படுத்தி, பொதுமக்களை இரவில் தூங்க கூட விடாமல் துன்புறுத்தும் திமுக தலைமையிலான அரசுக்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருவது பெரும் வேதனை அளிக்கிறது. மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், மக்கள் படும் சிரமத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். நேற்று சென்னையில் 107 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைமையிலான அரசோ தன் பங்குக்கு மின் வெட்டு செய்து மக்களை இரவில் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறது. கடந்த ஆண்டும் இதேபோன்று பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது மின்சாரத்துறை அமைச்சரோ மின்வெட்டுக்கு அணில் தான் காரணம் என்று ஒரு வாயில்லாத ஜீவன் மீது குற்றம் சுமத்தினார். இந்த வருடம் என்ன காரணம் சொல்லலாம் என்ற தீவிர ஆலோசனையில் மின்சாரவாரியம் இருப்பதாக தெரிய வருகிறது.

மேலும், மின் வெட்டு குற்றச்சாட்டுக்கு ஆளான அணில்கள் நேற்றைக்கு தமிழக முதல்வர் தொகுதி என்பது தெரியாமல் அதன் வேலையை காண்பித்து இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நேற்று கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் புழுக்கத்தாலும், வியர்வையாலும் தூக்கம் இல்லாமல் தவித்துள்ளனர். குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் கடும் அவதிக்குள்ளான பொது மக்கள் கொளத்தூர் அடுத்த பெரியார் நகரில் உள்ள உ மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போதும், மின்வாரிய ஊழியர்கள் சரியான பதில் கூறாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற பகுதிகளிலும் மின் வெட்டு பிரச்னையால் பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவிக்க வேண்டி இருப்பதாக வேதனைப்படுகின்றனர். ஏற்கனவே கோடை வெப்பத்தை தாங்கிக்கொள்ளமுடியாமலும், கொசு கடியிலிருந்து தப்பிக்க முட்டியாமலும் தவிக்கும் நிலையில் மின் தடையால் இரவில் விடிய விடிய தூங்க முடியாமல் சாமானிய மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் தூங்கியே ஒரு வார காலமாகிவிட்டது என்று சொல்லி மக்கள் புலம்பி தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்று மின்தடையால் ஏற்படும் பிரச்னைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்த மக்கள் அவரவர் பகுதிகளில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் முற்றுகையிட்டு வருகின்றனர். ஒருசில இடங்களில் மக்கள் வேறுவழியின்றி சாலைகளுக்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிகாலங்களில் மின் மிகை மாநிலமாக இருக்கும் தமிழகம் ஏனோ திமுக தலைமையிலான ஆட்சிகாலங்களில் மட்டும் மின் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக மாறிவிடுகிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ளமுடியவில்லை. மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் சுமார் 3,800 மெகாவாட் அளவுக்கு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்ததால் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கும் நம்மால் வழங்கமுடிந்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாக காட்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் கூடவே வந்துவிடுகிறது.

தமிழகத்தில் செயல்படும் அனல் மின் நிலையங்களில் ஏதாவது காரணம் சொல்லி திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தான் வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிப்புக்குள்ளானதாக செய்திகள் வந்தன. தற்போது அதே வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதாக சொல்லி கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும் நான்கு முறை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மின் உற்பத்தி தடைபட்டால் கண்டிப்பாக தேவையான அளவு மின் விநியோகம் செய்யமுடியாத நிலை ஏற்படும். அச்சமயம் மின்பற்றாக்குறையை சரிசெய்வதற்காக உடனே தனியாரிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதில் ஏதாவது ஆதாயம் பெற முடியும் என்ற நோக்கத்தில் திமுக தலைமையிலான அரசு செயற்கையாகவே, அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தியில் தடை ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.

மேலும், பராமரிப்பு என்று சொல்லி அடிக்கடி வீடுகளில் மின் வெட்டு செய்வதாகவும் பொதுமக்கள் சொல்லி வேதனை படுகின்றனர். திமுக தலைமையிலான அரசு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை மறைப்பதற்காக இதுபோன்று பராமரிப்பு காரணங்களை சொல்லி அடிக்கடி மின் தடையை ஏற்படுத்துகிறார்களோ? என்ற சந்தேகமும் பொதுமக்களுக்கு எழுகிறது.

கோடைகாலம் வரும் முன்னரே தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியின் மின் தேவையை கணக்கிட்டு அதற்கு தேவையான அளவு மின் விநியோகம் செய்வதற்கு அரசு தாயாராக இருக்க வேண்டும். மேலும் மின் உற்பத்தி செய்யப்படும் அனல்மின் நிலையங்களை தொடர்ந்து முறையாக பராமரிப்பு செய்து எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட வைக்க வேண்டும். மின்வெட்டு ஏற்படும் பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகள் முறையாக பணிகளை மேற்கொண்டாலே மின்வெட்டு நிகழாமல் பார்த்துக்கொள்ளமுடியும். ஒருநாள் மின்கட்டணம் செலுத்த தாமதமானாலும் உடனே பீசை பிடுங்கும் மின் வாரிய அதிகாரிகளுக்கு, மின்வெட்டு ஏற்படும்போது அதை உடனே வந்து சரி செய்யவேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? ஆனால் இவற்றையெல்லாம் இந்த விளம்பர ஆட்சியில் எதிர்பார்ப்பது என்றைக்குமே நடக்காத ஒன்று.

திமுக தலைமையிலான அரசு ஏழை எளிய சாமானிய மக்களின் துன்பத்தை போக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். திமுகவிற்கு வாக்களித்த குற்றத்திற்காக மின்சாரமின்றி இரவில் தூங்கமுடியாமல் தவிக்கும் சாமானிய மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு உடனே மின் தட்டுப்பாட்டை சீர் செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். திமுக தலைமையிலான அரசு இரண்டு வருடம் தூங்கியது போதும், இனிமேலாவது தூக்கத்திலிருந்து கண்விழித்து, மக்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.