“நான் எதற்கும் பயப்பட மாட்டேன்! சிங்கத்தின் தலையை தடவி கொடுப்பேன்”- சசிகலா
நான் சிறைக்குச் சென்றபோது கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என யாரைப் பதவியில் அமர்த்திச் சென்றேனோ, அவர்களே என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர் என சசிகலா கூறினார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாலமுருகனை ஆதரித்துக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பின் நான் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றியாக வேண்டும் என யாரை நம்பி ஒப்படைத்துச் சென்றேனோ, அவர்களே நான் சிறைக்குச் சென்ற மூன்றாவது மாதத்திலேயே என்னைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். நான்கு ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தபோது, கட்சிக் கொடியை நான் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டளையிட்டனர். மேலும், தமிழக எல்லையான ஓசூரைத் தாண்டி கட்சிக் கொடியுடன் நான் வந்தால் என்னைக் கைது செய்யவும் அறிவுறுத்தினர். இதற்கும் மேலாக, சிறையிலிருந்து வந்தவுடன் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது மணிமண்டபம் செல்ல முற்பட்டபோது, திறந்த இரண்டே நாளான மணிமண்டபத்தைப் பூட்டிவிட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி என்னை அங்கும் செல்ல விடாமல் தடுத்தனர். இவற்றையெல்லாம் நான் பொறுத்துக்கொண்டது இந்தக் கட்சித் தொண்டர்களையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே...நான் எதற்கும் பயப்பட மாட்டேன். சிங்கத்தை பார்த்தால் கூட அஞ்சாமல் அதன் தலையை தடவிக் கொடுத்துவிட்டுப் போவேன்” எனப் புலம்பிப் பேசினார்.