தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்: உணவுப்படி உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல்!
அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது,
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி அடுத்த மாதம் முதல் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 197 வார்டுகளிலும் கழிப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். அதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டமும் வாபஸ் பெற்றுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மழைக்காலத்தை முன்னிட்டு ரெயின்கோட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அக்டோபர் 10-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் மகப்பேறு விடுப்பு மற்றும் வார விடுப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். பணியின்போது உயிரிழந்த 7 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் புதிய வாகனங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணிகளுக்காக 300 புதிய வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை அக்.3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.