“விஜய்யை அப்படி பேசியதற்கு நான் வருத்தமும் படவில்லை.. அது குற்றமும் இல்லை”- சமுத்திரகனி
விஜய்யை அப்படி பேசியதற்கு நான் வருத்தமும் படவில்லை.. அது குற்றமும் இல்லை என நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயும், நடிகை த்ரிஷாவும் ஜோடியாக வந்தது பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக இயக்கக்கூடிய Texla திரைப்படத்தின் பூஜையில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. அவங்களை வெளியே கூட்டிட்டு போறீங்க எதுவா இருந்தாலும் நான்கு சுவற்றுக்குள்ள வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? யாரை நீ பழி வாங்குற? எல்லாம் நல்லபடியாக வந்துகொண்டிருந்தது. கட்சிக்காரனே இனிமேல் நம்மால் முடியாது என்று சொல்கிறான் என விஜயை விமர்சித்து பேசிய வீடியோ வைரலானது.
இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள சமுத்திரகனி, “வீடியோவுக்கு மானே தேனே போட்டு தம்பிகள் வேற வேலைய பாத்துட்டாங்க... வீடியோ எடுக்கும் போது எனக்கு தெரியும், அங்கு அந்த தம்பி மட்டும் தான் வீடியோ எடுத்தான். எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. சந்தோஷமாக இருந்தாலும் சரி, வலியாக இருந்தாலும் சரி, வேதனையாக இருந்தாலும் சரி அது அப்படியே பிரதிபலிச்சு கொண்டு போயிடனும். அந்த வீடியோவுக்கு மானே தேனே போட்டு நம்ம தம்பிகள் வேற வேலைய பாத்துட்டாங்க. அதை நான் ஒன்னும் குற்றமாக நினைக்கவில்லை, பேசி விட்டு வருத்தப்படவும் இல்லை. அது ஒரு அக்கறை, ஒரு வலி, என் மனதில் பட்டது தான் நான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.