×

1,200 லிட்டர் விஷச்சாராயம் ரூ.66,000க்கு விற்பனை- விசாரணையில் அம்பலம்

 

கடந்த 13 ஆம் தேதி நடந்த விஷச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 நபர்களும், செங்கல்பட்டில் 8 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் கம்பெனியின் அதிபர் இளையநம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மெத்தனாலை செங்கல்பட்டு, சித்தாமூரில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும், மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதோடு இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களை பற்றிய புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷச்சாராயம் சென்னை வானகரம் ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது.

ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி இதை 2018ஆம் ஆண்டு வாங்கி, பின்னர் கொரோனா காரணமாக இதை தொழிற்சாலையில் பயன்படுத்த இயலாமல் போனதாலும், இவர்களது தொழிற்சாலை தீவாலான நிலையில் 1200 லிட்டர் விஷச்சாராயத்தை (200 லிட்டர் கொண்ட 6 பேரல்களில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த பரகதுல்லா (எ) ராஜா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66,000க்கு விற்பனை செய்துள்ளார். இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு மரணம் ஏற்படுத்திய விஷச்சாராயம் கிடைத்திருப்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

மேலும், விஷச்சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷச்சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 400 லிட்டர் விஷச்சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இவரும் கைது செய்யப்பட்டியிருக்கிறார். இவர் மீது 6 திருட்டு வழக்குகளும், 5 மது விலக்கு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.