நேபாள வெள்ளத்தில் காணாமல்போன யாத்திரீகர்கள்- கண்கள் கலங்கிய ஜக்கி வாசுதேவ்
நேபாளத்திற்கு ஈஷா மூலம் சென்ற வெளிநாட்டினர் சுமார் 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் ஆன்மீகத் தலைவருமான ஜக்கி வாசுதேவ் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் ஆன்மீகத் தலைவருமான ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நேபாளத்திற்கு ஈஷா மூலம் சென்ற வெளிநாட்டினர் சுமார் 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மாயமான ஈஷா யாத்ரீகர்களில் 46 பேர் பெண்கள், 34 பேர் ஆண்கள். அவர்களில், அமெரிக்காவிலிருந்து 22 பேரும், கனடாவிலிருந்து 12 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேரும், ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஒன்பது பேரும், ஜெர்மனியிலிருந்து நான்கு பேரும், பிரான்ஸ் மற்றும் நேபாளத்திலிருந்து தலா மூன்று பேரும், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயினிலிருந்து தலா இரண்டு பேரும், பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தலா ஒருவரும் அடங்குவர்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், கைலாஷ் மானசரோவர் யாத்திரையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஈஷா குழுவைச் சேர்ந்த 80 பேர் கியிராங்கில் உள்ள குடிவரவு கட்டிடத்திற்குள் இருந்தனர். வெள்ளம் தாக்கியதற்கு ஒன்பது நிமிடங்களுக்கு முன்புதான் குழுத் தலைவரிடம் அறக்கட்டளை அதிகாரிகள் கடைசியாக தொடர்புகொண்டனர். காலை 9:05 மணிக்கு, அவர்கள் குடிவரவு அலுவலகத்திற்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, 9:14 மணிக்கு வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின் குழுத் தலைவரின் நேபாளத் தொலைபேசி இயங்கவே இல்லை அவர் எல்லையைக் கடந்திருந்தால், அவரது நேபாளத் தொலைபேசி இயங்கியிருக்க வேண்டும். அது இயங்கவில்லை.இந்தியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சீனத் தூதரகம் மூலம் நாங்கள் அனுமதி கோரி வருகிறோம், மேலும் அமெரிக்கத் தூதரகமும் இதுகுறித்து கேட்டு வருகிறது” என்றார்.