புடவையுடன் வெறும் காலில் 1,600 மீட்டர் ஓட்டம்! - ஹோம் கார்ட் தேர்வில் அசத்திய கைம்பெண்ணின் நெகிழ்ச்சி சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் நடைபெற்ற ஹோம் கார்ட் (Home Guard) உடற்தகுதித் தேர்வில், துல்மி தாலுகா சோசோ கிராமத்தைச் சேர்ந்த கவிதா குமாரி என்ற கைம்பெண், தனது அபார மன உறுதியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துப் பிற தேர்வர்களுக்குப் பெரும் ஊக்கமாக உருவெடுத்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலில், ஓடுவதற்கான ஷூ (Running Shoes) அல்லது ட்ராக்சூட் (Tracksuit) போன்ற எந்தப் பயிற்சி ஆடைகளும் இல்லாத நிலையிலும், புடவை அணிந்து வெறும் காலில் 1,600 மீட்டர் தொலைவை ஓடி முடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 10 நிமிட காலக்கெடுவுக்கு முன்பாகவே, வெறும் 6 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்.
புடவையுடன் வெறும் காலில் அவர் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் ஓட்டப்பயிற்சி அகாடமி உறுப்பினர்கள் அவரது வீட்டிற்கே நேரில் சென்று கவிதா குமாரியைப் பாராட்டி கெளரவித்தனர்.
கணவனை இழந்த கவிதா குமாரி, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த மாமியார், மாமனாரைப் பராமரித்து வருகிறார். வறுமையின் காரணமாக ஓடுவதற்கான ஷூ வாங்க வசதியில்லாததால், தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து புடவையிலேயே ஓடிப் பயிற்சி எடுத்து வந்துள்ளார். "எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக மாற்றவே இந்த வேலையில் சேர விரும்புகிறேன்" என கவிதா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ராம்கர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 284 ஹோம் கார்ட் பணியிடங்களில் 50% இடங்கள் பெண்களுக்காகவும், அதில் 5% இடங்கள் கைம்பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. "இலக்கு உறுதியாக இருந்தால் வறுமையோ, ஆடையோ ஒரு தடையாக இருக்காது" என்பதை கவிதா குமாரி நிரூபித்துள்ளார்.
🚨 హోమ్ గార్డ్ ఉద్యోగం కోసం చీరతో.. 1600 మీటర్లు పరుగు తీసిన మహిళ.. ఈ ఉద్యోగం ఆమెకు ఎంత అవసరమో.. 🙏 https://t.co/AbFUve7zf9
— UttarandhraNow (@UttarandhraNow) October 6, 2026