×

ரூ. 56 லட்சம் வரி கட்டத் தேவையில்லை! ரஜினிகாந்துக்குக் கிடைத்த மிகப்பெரிய நிம்மதி - நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

 

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 46 லட்சத்து 86 ஆயிரத்து 870 ரூபாயும், பின்னர் 10 லட்சத்து 2 ஆயிரத்து 705 ரூபாய் என மொத்தமாக 56 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் சேவை வரி செலுத்தம்படி, நடிகர் ரஜினிகாந்த்திற்கு சேவை வரித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை நந்தனத்தில் உள்ள சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் எம். அஜித்குமார் மற்றும் நீதித்துறை உறுப்பினர் டி.வி. அஜயன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நிதிச் சட்டம் 1994 பிரிவு 65 (105) (zzzz) கீழ் ஹோட்டலுக்காக வாடகைக்கு விடப்படும் கட்டடங்களுக்கு சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், சேவை வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் டி.டி.ரவிச்சந்திரன் வாதிட்டார்.

இந்த வாதத்தை மறுத்த சேவை வரிகள் துறை தரப்பு வழக்கறிஞர் ஓ.எம். ரீனா, ஹோட்டலுக்குள் உணவகம், கருத்தரங்க கூடம், கிளப், பார் ஆகியவை இயங்கி வந்ததால், சேவை வரி விலக்கு பெற முடியாது என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், தங்கும் விருந்தினர்களின் வசதிக்காக நடத்தப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஹோட்டலின் அங்கமாக மட்டுமே கருத முடியும் என்றும், அவற்றை தனிக் கட்டடமாக கருத முடியாது என்பதால் வரி விலக்கு பெற நடிகர் ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என கூறி, 56 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.