ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி : கோர்ட் ஏறிய பராசக்தி இயக்குனர் சுதா கொங்கரா..!!
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்திற்காக, தனக்கு ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ₹8.39 கோடி ஊதியத்தை அதன் தயாரிப்பு நிறுவனமான 'டான் பிக்சர்ஸ்' இன்னும் வழங்கவில்லை என்று கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
சுதா கொங்கராவின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வரும் ஜூலை 8-ஆம் தேதி வரை 'பராசக்தி' படத்தின் செயற்கைக்கோள் (Satellite) வழி வெளியீட்டு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, வரும் ஜூலை 10 அன்று திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள அதர்வா நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சுதா கொங்கரா தனது மனுவில் கோரியுள்ளார். இது குறித்து ஜூலை 7-க்குள் பதிலளிக்குமாறு தயாரிப்பு தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். ஒருதலைக் காதலின் இனிமையும் வலியும் கலந்த உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் பகத் பாசில், பிரீத்தி முகுந்தன் மற்றும் கயாது லோஹர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைப்பதோடு மட்டுமல்லாமல், நடிகராகவும் இதில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் பிரபலமான நிஹாரிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. குடும்பம் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், வெளியீட்டிற்கு முன்பே சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது.
ரூ.8.39 கோடி ஊதிய நிலுவை குறித்த குற்றச்சாட்டுக்கு டான் பிக்சர்ஸ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. ஜூலை 8 அன்று நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை, ‘பராசக்தி’ மற்றும் ‘இதயம் முரளி’ ஆகிய 2 திரைப்படங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.