×

செந்தில்பாலாஜியை மட்டும் குறி வைப்பது ஏன்?- ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

 

நடந்து முடிந்த கருநாடக சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய பீதியை, அச்சத்தை, பயத்தை, நடுக்கத்தை பா.ஜ.க.விற்கு ஏற்படுத்தி விட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதியிடம் ஒன்றிய அரசு, செந்தில்பாலாஜியை மட்டும் குறி வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இரண்டு மாவட்டங்கள் அ.தி.முக..வினுடைய கோட்டையாக இருந்ததை உடைத்துக் காட்டி, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வழிவகுத்தார் என்பதுதான் அவரை குறிவைக்க காரணம். இது பழிவாங்கும் நடவடிக்கை என்று நான் சொல்லவில்லை. இன்றைக்கு நான் சேலஞ்ச் பண்ணி சொல்கிறேன்; தவறு செய்பவர்களின் வீடுகளில் ரெய்டு போவது தவறு கிடையாது. அதைப்பற்றி நாங்கள் பயப்படவே இல்லை.  அண்ணாமலை சொன்ன பிறகு செய்கிறீர்கள் என்றால், அண்ணாமலை என்ன சி.பி.ஐ. இயக்குநரா? வருமான வரித் துறை இயக்குநரா?  யார் அவர்? அதனால்தான் சந்தேகம் வருகிறது.

ஒரு போர்க் களத்திற்கு எப்படி குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை போன்ற பல படைகளை போர்க்களத்தில் பயன்படுத்துவார்கள். அதேபோல, ஒன்றிய அரசை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கின்ற மோடி அரசு, பா.ஜ.க. அரசு, எப்படி போர்க் களத்தில் குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை போன்று பல படைகளை வைத்து தேர்தல் எனும் போர்க்களத்தினை சந்திக்குமோ, அதேபோல, இந்த ஜனநாயக நாட்டில், வருமான வரித் துறை (ஐ.டி.), அமுலாக்கத் துறை (இ.டி), மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) என்கின்ற இந்த மூன்று படைகளை கைகளில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கிவிடலாம் என்று கனவு காண்கின்றனர்.

நான் திட்டமிட்டுச் சொல்கிறேன், தெளிவாகச் சொல்கிறேன் - எத்தனை ரெய்டு வேண்டுமானாலும் நடத்தட்டும்; அதைப்பற்றி கவலையில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு,  யார் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருக்கிறார். அப்படி அதிகாரிகள் ரெய்டு நடத்தி, என்ன முடிவெடுத்தாலும் எடுத்துக்கொள்ளட்டும்; அதைப்பற்றி கவலையில்லை. இந்த ரெய்டுகள் எப்படிப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.