×

மதுரை பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. போலீசில் சிக்கியும் கூலாக போஸ் கொடுத்த கும்பல்..!

 

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 10-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நபரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை காவலர் விஜய் கண்ணா என அறிமுகப்படுத்தியுள்ளார். மனுதாரரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகக் கூறி, மனுதாரர் மற்றும் அவரது மனைவியை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து மிரட்டியுள்ளனர்.

வங்கி கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி மிரட்டிய அந்த கும்பல், மனுதாரரிடமிருந்து சுமார் ரூ.60,72,000-ஐ தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றச் செய்துள்ளனர். மேலும் பணம் கேட்டு வற்புறுத்தியபோது சந்தேகமடைந்த மனுதாரர், இது குறித்து மதுரை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

 இந்த வழக்கினை விசாரித்த தனிப்படையினர், செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் கேரளாவில் பதுங்கியிருப்பது உறுதியானது. அதன்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், தேனியைச் சேர்ந்த உமர் பாரூக், முகமது ரியாஸ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஃபைசல் ஹெக் உட்பட 6 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக வங்கி கணக்குகளைத் தருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அரவிந்த் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் சைபர் புகார்களுக்கு 1930 என்ற எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தாமதமின்றி அணுகுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

image source:etvbharat