×

திமுக ஆட்சியில் 6 லட்சம் கோடி கொள்ளை..! தேர்தலுக்குப் பின் அமைச்சர்கள் கம்பி எண்ணுவார்கள்" - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..!

 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:

நேற்றைய தினம் தமிழ்நாட்டின் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்ன இருந்தது என்பது அந்த அமைச்சர்களுக்கு தெரியாது. முதலமைச்சருக்கு துதி பாடக்கூடிய பட்ஜெட்டாக அமைந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 84 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது தமிழக அரசு. தமிழக அரசுக்கு 10 லட்சம் கோடி நேரடி கடன் மற்றும் பொது நிறுவனங்களில் 5 லட்சம் கோடி கடன் என மொத்தம் 15 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளிக்கிறது.

மேலும் கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திமுக அரசு கடன் வாங்கி சாதனை படைத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கணக்கெடுத்து பார்க்கும்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 4 லட்சத்து 54 ஆயிரம் கோடி மட்டுமே கடன் இருந்தது. அதாவது கடந்த 74 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் நேரடி கடன் என்பது 4 லட்சத்து 54 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால் திமுக கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் வாங்கிய கடன் என்பது 4 லட்சத்து 96 ஆயிரம் கோடி ஆக மொத்தம் 10 லட்சம் கோடி நேரடி கடனில் தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இது தவிர பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக 5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 15 லட்சம் கோடி தமிழக அரசு கடனில் தத்தளித்து வருகிறது. கடன் வாங்கி கடனை கட்டுவது தான் முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகம். தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் நிர்வாக திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 6 லட்சம் கோடி அளவுக்கு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலுக்கு பிறகு கொள்ளை அடித்த அமைச்சர்கள் அனைவரும் கம்பி எண்ணுவார்கள். செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் எல்லாம் ஊதிய உயர்வு கோரி போராடிய போது நிதி இல்லை என சொல்ல ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை 5000 போட மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?

தமிழகத்தில் குக்கிராமத்தில் கூட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. மதுக்கடையை திறந்து பல தலைமுறைகளை கருணாநிதி சீரழித்தார். அவரது மகன் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறி ஒரு தலைமுறையை சீரழித்துவிட்டார். வருகிற தேர்தல் தமிழகத்தை காப்பாற்றும் முக்கியமான தேர்தல். அனைவரும் ஒற்றுமையுடன், உணர்வுடன் பணி செய்து அதிமுக கூட்டணியை வெல்ல செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.