மதுரைக்கு ₹4,000, நெல்லைக்கு ₹4,500! - ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்க்கிறதா அரசு? அன்புமணி கேள்வி!
அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்கு ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு முறையும் அம்பலப்படுத்தி வருகிறது. அப்போதெல்லாம் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி ரூ.100 அல்லது ரூ.200 கட்டணக் குறைப்பு செய்ய வைப்பது, அதையும் மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது போன்ற ஏமாற்று வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.
ஒரு மக்கள்நல அரசின் கடமை மக்களின் பக்கம் நிற்பது தான். திமுக அரசு மக்களின் பக்கம் நிற்கிறது என்றால், சட்டவிரோதமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் கட்டணங்களைக் குறைக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட திமுக அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பக்கம் நின்று அவை மக்களை சுரண்டுவதற்கு துணை போவதையே திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து, தனியார் முதலாளிகளுக்கு ஏவல் செய்வதையே கடமையாக வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை திமுக அரசு தடுக்கத் தவறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.