"ஒரு யூனிட் மின்சாரம் ₹35-ஆ?" – மின்வெட்டைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு!
தமிழ்நாட்டில் மின்வெட்டை சமாளிக்க, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான மின்னணு-டெண்டரை (E- Tender) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அதில், "அக்.12- ஆம் தேதி முதல் அக்.31- ஆம் தேதி வரையிலான நாட்களில் அதிகாலையில் பீக் ஹவர்ஸ் எனப்படும் உச்ச நேரமான நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 02.00 மணி வரையிலான பயன்பாட்டிற்காக 1,500 மெகாவாட் மின்சாரமும், மாலையில் உச்ச நேரமான 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரையிலான பயன்பாட்டிற்காக 3,000 மெகாவாட் மின்சாரமும் அவசரத் தேவையின் அடிப்படையில் கொள்முதல் செய்ய டிஎன்பிடிசிஎல் (TNPDCL) மின்னணு டெண்டரைக் கோருகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மாநிலத்திற்குள் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ (அல்லது) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் (CERC) அங்கீகரிக்கப்பட்ட மின்சார உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சார கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறுகிய கால மின்சார கொள்முதலுக்கான வழிகாட்டுதலின்படியே ஏலம் நடவடிக்கை இருக்கும். மின்சார ஏலத்திற்கான பிரத்யேக இணையதளமான 'DEEP' வாயிலாக மட்டும் ஏலம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35- க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தத்தை இறுதிச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 4,500 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து விண்ணப்பித்திருந்த நிலையில், ரூ.35- க்கு தமிழ்நாடு அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்யவுள்ளதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றன.