சென்னையில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தில் மோதி கவனத்தைத் திசைதிருப்பி ரூ.22 லட்சம் கொள்ளை!
சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து நிறுவனத்தில் அகஸ்டின் அந்தோணி என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்திற்காக பல்வேறு இடங்களில் வசூல் செய்யப்பட்ட பணத்தை அவர் எடுத்துச் செல்வது வழக்கமாகும். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 24) இரவு அந்த நிறுவனத்தின் வசூல் தொகையான சுமார் 22 லட்ச ரூபாயை ஒரு பையில் வைத்து அகஸ்டின் அந்தோனி தனது இருசக்கர வாகனத்தில் அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாறு சிக்னல் அருகே இரவு சுமார் 10 மணியளவில் அவர் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அகஸ்டின் அந்தோணி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அகஸ்டின் அந்தோணி நிலைதடுமாறியுள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கவனத்தை திசைதிருப்பி அவரிடம் இருந்த பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.22 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அகஸ்டின் அந்தோணி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ரூ.22 லட்சம் பணம் எங்கிருந்து வசூல் செய்யப்பட்டது. அந்த பணம் எவ்வாறு எடுத்து செல்லப்பட்டது.
பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் எப்படி கிடைத்து உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அடையாறு சிக்னல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டும் காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி ரூ. 22 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.