×

புதிய விதி அமல் : இனி 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றால் ₹10,000 ஃபைன்!

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் முன்பை விட, பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. 'அதே சமயம் விபத்தில் சிக்குவோரை மீட்டு, தாமதிக்காமல் மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றமும், மத்திய கணக்கு தணிக்கையாளரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சுட்டிக் காட்டின.

அதன்படி விபத்து காலத்தில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியான புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அவசரகால பராமரிப்பு திட்டம் மூலம், அவசரகால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி, அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதில் இருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்குள் நடக்கும் விபத்து பகுதிக்கு 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றடைய வேண்டும். 10 கி.மீ.,க்கு அதிகமான துாரம் எனில், அதற்கேற்ப நேரம் கணக்கிடப்படும்.அதே போல, அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதில் இருந்து 1 மணி நேரத்திற்குள், விபத்தில் சிக்கியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விட வேண்டும்.

'இந்த காலக்கெடுவை தவறவிட்டாலோ, அல்லது அவசர அழைப்பை நிராகரித்தாலோ சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஒப்பந்ததாரருக்கு, தவறு நிகழும் ஒவ்வொரு முறையும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில், 3,000 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 1,000 ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவிகள் மற்றும் சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஆம்புலன்ஸ்களில் உரிய மருத்துவ உபகரணங்கள், ஊழியர்கள் இல்லாவிட்டாலும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவிக்கு, 1033 என்ற இலவச எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.