ரூ.100 கோடி மோசடி- 59 பள்ளிகள் புகார்
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பெற்ற மோசடி வழக்கில் இதுவரை 59 பள்ளிகள் புகார் கொடுத்துள்ளன.
தி.மு.க ஆட்சியில் 1000 பள்ளிகளிடம் அங்கீகாரத்தை புதுப்பிக்க தலா ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்கள். தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். ஆனால் இன்று ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முடித்து விட்டோம். இது வரலாற்று சாதனை என தனியார் பள்ளி கூட்டமைப்பினர் பேட்டியளித்தது பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவரும் தி.மு.க. பிரமுகருமான பி.டி. அரசக்குமார் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தன்னைப் பற்றி அவதூறாக பேசிய தனியார் பள்ளிகூட்டமைப்பின் நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பினார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்.
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் தைரியமாக புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்ததையடுத்து, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பெற்ற மோசடி வழக்கில் இதுவரை 59 பள்ளிகள் புகார் கொடுத்துள்ளன. ரூ.7.34 கோடி பெற்றதாக 59 பள்ளிகளிடமிருந்து புகார் வந்துள்ள நிலையில், பலகோடி மதிப்புள்ள 24 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மோசடி செய்யப்பட்ட பணத்தில் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ஏமாந்த பள்ளிகளின் பட்டியலையும் தயார் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.